Saturday 26 September 2015

வலிக்கு தடீ


***************************************
நெருஞ்சி முள்ளும் வலிக்க வில்லை தங்கமே தங்கம் - உனை
நினைந்து மனம் கொதிக்கையிலே தங்கமே தங்கம்
வருஞ் செயல்கள் பலிக்கவில்லை தங்கமே தங்கம்- உள்ளம்
வருந்தி யுடல் துடிக்குதடி தங்கமே தங்கம்
பெருஞ்சினமே பொங்குதடி எதனிலும் எங்கும் - இதன்
பெயரெதுவோ மனம் கசந்தேன் இருளடி எங்கும்
விரும்பி யுள்ளம் துடிக்குதடி விளைவயல் நெல்லும் -எனும்
விதம் வளரும் மன எண்ணமோ வெறுமையில் காணும்

அரும்பும் மலர் சிறுமுகைபோல் அவிழ்ந்திடும் அன்பும்- அதில்
அழகுடனே சிரிக்கும்முகம் அதனையும் எண்ணும்
குரும்பைகட்டி தேரிழுத்து கொண்டது அன்றே -இன்று
குழைந்தஎழில் சிதையுமுன்னே கலைந்ததேன் இன்னும் ‘
தெருவில் மனம் அலையுதடி திரும்பிடநீயும்- என்னை
தொடும்விரல்கள் தொலைந்ததென்ன விழிமூடி நானும்
தரும்வகையில் உனதுஅன்பு தவறிட காணும் -இங்கே
திரும்பி நின்றே தனியுலகம் ரசிக்கவோ நாளும்

வரம்புகட்டி வாழ்ந்தவகை மனமெண்ணி நானும் அந்த
வளர்மதியின் முழுமை கொள்ள வாழ்த்துவ துள்ளம்
பிரமை கொள்ளும் பொழுது கொண்டேன் பேரிடியொன்றே என்னைப்
புறம் விழுத்தி அழவிட என் பெருமை கொண்டாயோ
நிரம்பி உள்ளம் நிம்மதியில் நேர்ந்திடும் வாழ்வில் - எனை
நிர்க்கதியாய் விடுவதிலே நிலைப்பதும் ஏனோ
கரம்பிடித்தால் கைவிடலாம் காரணம் கொண்டால் - அது
கடைசியென ஆகும்வரை காத்திரு கண்ணே

No comments:

Post a Comment