Saturday 26 September 2015

நிதம் சக்தி


ஏனிதோ எண்ணம் மனதிருத்தி -அதை
ஏதோ பொருள கொண்டு தான் வருத்தி
தேனிதழாய்மென் மனம் உறுத்தி - அது
தேம்பியழும் விதமாய்ப் படுத்தி
நானில மீதினில் நானுழன்றும் - நதி
நாடும் கடலென்றுனைக் கலந்தும்
வானிலெழுந்த என் தெய்வ சக்தி -நீயும்
வைத்த பாதை ஏனோ முள்நிறுத்தி

மானில் மருள் குணம் கண்ணில் வைத்தாய் - அந்தி
மாலையில் செங்கதிர் தாளவைத்தாய்
தேனில் நிறைபூக்கள் சத்தமின்றி அதன்
தேகம் மலர்ந்து கொண்டாட வைத்தாய்
வானில் ஒளிர்ந்திடும் வட்டக் கதிர் ஒரு
வீசும் பந்தாய் எழும் வீழுவதுவும்
தானியங்கும் வண்ணம் பூமியினை நிதம்
தன்னைச் சுற்றிச் சுழன்றோடச் செய்தும்

ஆகியதாய் அண்டம்மேவியெழும் எங்கள்
ஆதிசக்தி தனை எண்ணியென்றும்
காகிதப்பூப் படைத்தன்பு கொண்டேன் பலர்
காணக் கவிபபூக்கள் மாலைசெய்தேன்
ஆகிட நீ அதனூடே அசைந்தொரு
அற்புதமான ஒளி கொடுத்தாய்
வேகிட என்னுயிர் வாடும் நிலைதன்னை
வேடிக்கை யாகவோ காட்டிநின்றாய்

வாக்கினில் கொள் விதமாக்கி வைத்து அதை
வாழைக்கனி போலினிக்க வைத்து
போக்கினில் மாற்றக்கள் ஊக்குவித்து அதை
போக்கிப் புதிதென தோற்றுவித்து
ஏக்கக்த்திலெம்மையும் ஆழ்த்தி விட்டு அதை
எண்ணக் கைகொண்டெம்மையும் கிள்ளிவிட்டு
கூக்குரலிட் டழுகையிலே ஏனோ
கொட்டும் கண்ணீர்த் துளி பாராநின்றாய்

No comments:

Post a Comment