Monday 28 September 2015

ஏக்கத்தில்


நின்னை தொலைவிருத்தி நெஞ்சம் வலியெழுப்ப
நின்றேன் நிமிடம் நகராதோ
பொன்னை மணந்து ஒருபோதும்கலக்கமின்றிப்
போகும் வாழ்வு திரும்பாதோ
இன்னல் பலகொடுத்தேன்  என்னை கரம்பிடித்தாய்
உந்தன் மகிழ்வு பெரிதாக
எனனே செயல் புரிவேன் இந்தோர் உலகமதில்
ஏக்கம் என முடிவும் தகுமோ

செந்தேன் நிலவெழுந்து செல்லும் வானமதில்
சென்றே உனையடைவதென்றோ
தந்தேன் என அருகில் தழுவும் நிலையடைய
தாகமெடுப்ப தெந்தன் தவறோ
பொன்தேர் தனிலிருந்து போகும் வழியில் எழில்,
பொய்கை மலர் நிறைந்த சுனையில்
வந்தே யிருந்து மலர் வாசம்தனை நுகர்ந்து 
வாழ்வைக் கழிக்க வருவாயோ

மந்தம் எழும் மனதில் மாயக் கனவுகளில்
மாற்றம் இனியும் வருமாமோ
சொந்தம் என உனையும் தொட்டே மகிழ்வுகொள்ள
சொல்லும் நாளுமென்று வருமோ
சந்தமிசைக்க கவி  சொல்லும் மனதில் உந்தன்
சிந்தை மலர்ந்து விடுமாமோ
நந்திஎன  விதியும் நடுவில் பிரித்த நிலை
நல்லோர் முடிவைத் தருமாமோ

வந்தே எனதருகில் வாடும் மனதில் சுகம் 
தந்தேன்என்றே மலருவாயோ
விந்தை எனதுவிரல் வீழும் கண்ணீர்துடைத்து 
விம்மல்தனை நிறுத்துமாமோ
பந்தே என எறியும் பல்நேர் விளைமொழியும்  
பதைக்கும் நிலை தருவதுண்டோ 
நொந்தேன் மனம்வலித்து நெஞ்சம் அழுகைவிட்டு
நிகழும் வாழ்வும் திரும்பாதோ
 

No comments:

Post a Comment