Saturday 7 May 2016

தமிழே சொல்லாயோ

தென்றலசைந்திடத் தேன்மொழி பேசிடும்
திங்கள் நிழலென வந்தாள் - அவள்
கன்னம் சிவந்திடக் கற்பனையால் எனைக்
கண்டு கலங்காதே என்றாள்
பொன்னை நிகர்த்திடும் மேனி யெழில் தன்னில்
பூவை இட்ட வண்ணமாக - அவள்
சின்னநடை கொண்டுவந்தவள் வந்துமுன்
சிந்தை மகிழ்ந்திட நின்றாள்

தென்னை யசைந்திடத் தேன்மலர் தூங்கிடச்
சில்லெனும் வண்டெழுந்தோட - வரும்
முன்னிலவை மறைதேகும் முகில் போலும்
மேவுங் கருங் குழலாட
புன்னகை பூத்தெனைப் கண்டுமனம்கொண்ட
பேதமை யெண்ணி வியந்தாள் - ஓர்
சின்னஞ் சிறுவனை நோக்குவதாய் என்னைச்
சொல்லெனச் சீண்டி மகிழ்ந்தாள்

அன்னையெனும் உயிர்த் தீந்தமிழே எந்தன்
ஆவிகலங்கிட நின்றேன் - இதில்
இன்னிசை தோன்றிட ஏழு மலர்களில்
என்முகம் கண்டு மகிழ்ந்தேன்
முன்னிருந்து கவிபாடும்நிலைதனும்
மீண்டும் முயிர்த்திடுமாமோ - இளங்
கன்னித்தமிழ் மகள்நீ யல்லவோ இதன்
காரணம் கூறிடவேண்டும்

மென்னிதழ் கொள்முகை கட்டு விட்டேநெகிழ்
வென்னும்  நிலைகொண்டாதாக - பழம்
தொன்மை வயதுடை கன்னித் தமிழ்மகள்
துல்லியமென் குரல்பேச்சில்,
அன்னியமல்ல உன் தன்மையிலேமனம்
எங்கலை பாய்ந்திட நின்றாய் - இந்த
இன்னல் கொண்டேங்கிட ஏது நினைந்தனை
உள்ளதியம்பிடு என்றாள்

உன்னையறிவேன் நல்உத்தமியே உனை .
இன்கவிதை கொண்டு போற்றும் - இந்தச்
சின்ன மனதினில்சேரும் புயலெழச்
சிந்தைபயம் கொண்டு நின்றேனென
மின்னல்களை அந்த மேகமதில் இட்டு
மோதுமெழில் காணும் சக்தி = உயிர்
பின்னலிலும் சிலவேடிக்கைகள் செய்து
பின்னின்று கண்டுநகைப்பாள்

என்னஇதுவென நானறியேன்  இசை
யேந்தும் முத்தமிழின் தேவி-  சுகம்
தன்னும் எழும் இசை கொள்வதினால் என்ன
இன்னல் விளைந்திடலாமோ
தின்னும் கனிதனில் வெல்லமிட்டாள் அந்த
தேன்சுவை கைப்பதுமுண்டோ -இது
என்னவகை என்று ஏளனம் செய்திசை
ஏழெனக் காட்டி மறைந்தாள்!

***நன்றி.(. இதுகற்பனை

No comments:

Post a Comment